Skip to main content

இணையதளம் x இணையத்தளம் : எது சரி ?


இரண்டு சொற்கள் புணரும் பொழுது ,

1.  முதலாவதாக வரும் சொல்லின் பெயர் "நிலைமொழி"
2.  இரண்டாவதாக வரும் சொல்லின் பெயர் "வருமொழி"

வருமொழியின் முதலெழுத்துக்   க , ச , த , ப   என்று வந்தால், இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒற்று வரவேண்டும் என்பது அடிப்படை விதி .  ஆனால் 'ஒற்று' வருமா வராதா என்பதை உறுதி செய்வது நிலைமொழியின் ஈற்று( கடைசி) எழுத்து தான்.

  •  எழுத்துப் புணரியல்
  •  வேற்றுமை
  •  குற்றியலுகரம்
  •  முற்றியலுகரம்
  •  அலங்கடைகள் ( exceptions)
  •  குறுக்கம்
  •  அல்வழித் தொகைச்சொல்
  •  மரபு மற்றும் வழக்கு

தெரிந்தால் மட்டுமே 'ஒற்று'ப் போட்டு எழுதுவதா வேண்டாமா என்று தெரியும்.

ஒரேழுத்து ஒருமொழி அடுத்து ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் இலக்கண விதி இல்லை.

சரி,   இணையதளத்திற்கு வருவோம்.   ஒற்றுப் போட்டு எழுதுவதா ? வேண்டாமா ?

இணையம் ஆகிய/என்னும் தளம்
    =   இணையம் + தளம்   [ பண்புதொகை]
    =    இணைய   + தளம்    [ மகரக் குறுக்கம்]
    =    இணையதளம்

 வருமொழியில் க , ச , த , ப   வருகின்றது , எனவே ஒற்று வரவேண்டும் , ஆனால் ஒற்றுப் போடாமல் தான் எழுதுகின்றோம், ஏன் ?

சட்டம் + சபை   =      சட்டசபை                         

ஏன்  ' சட்டச்சபை ' என்று எழுதாது, ஒற்றுப் போடாமல் எழுதுகின்றோம். அதுவே ' சட்டப்பேரவை ' என்று எழுதும்பொழுது 'ஒற்று' வருகின்றது.

பாடம் + சாலை =      பாடசாலை            

ஒற்றுவரவில்லை,  ஆனால் ' பாடத்திட்டம் ' என்று எழுதும் பொழுது ' ஒற்று ' வருகின்றது.

நடை   + பாதை    =     நடைபாதை
 
ஒற்று வரவில்லை , ' நடைப்பயிற்சி ' க்கு ஒற்று வருகின்றது.

விடை:     மேலே கண்ட வருமொழிச் சொற்கள் அனைத்தும் வேறு மொழிச்சொற்கள். அவற்றை வேறுபடுத்திக் காட்டவே , இடையில் 'ஒற்று'ப் போடாமல் எழுதினர் தமிழறிஞர். இது வழக்கில் உள்ள மரபு.

தளம்      -       ஸ்தளம்/ஸ்தலா     [ PLACE ]
சபை      -        சபா                      [ STAGE / COURT]
சாலை   -        ஷாலா                   [ HUT / SCHOOL]
பாதை   -         பாத்                      [ PATH ]

அதனால் தான்,  சங்கத்தமிழுக்கு  ஒற்று வருகின்றது,   தமிழ் சங்கத்திற்கு ஒற்று வருவதில்லை.

SUBSCRIBE here to nallatamil grammar