ஆங்கிலத்தில் Dictionary மற்றும் Thesaurus க்கு உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை நமக்குத் தெரியும்.
Dictionary gives the 'meaning'.
Thesaurus gives meaning, synonyms, antonyms.
ஆம் சரி, கிட்டத்தட்ட உரிச்சொல் அகராதிதான். [ உரிச்சொல் lessons ]
Dictionary - அகராதி (அருஞ்சொற்பொருள் உரைக்கும்)
Thesaurus - நிகண்டு (ஒரே பொருள் தரும் பல உரிச்சொற்கள் உரைக்கும்)
தமிழ் மொழியின் முதல் நிகண்டு 'திவாகர நிகண்டு' எனப்படுகின்றது. காலம் சரியாகத் தெரியாவிடினும் இது மிகத் தொன்மையானது என்றும் திவாகர முனிவர் இயற்றியதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறப்படுகின்றது. மிகவும் பரந்து விரிந்த நூலாகியமையால் , திவாகர முனிவரின் மகன் பிங்கல முனிவரால் சுருக்கி எளிமையாக்கப்பட்டு 'பிங்கல நிகண்டு' வந்தது என்றும் கூறப்படுகின்றது. இதற்குப் பின்னரும் பல நிகண்டுகள் வந்துள்ளன. இருப்பினும் 'பிங்கல நிகண்டே' நிலைபெற்றாது.
'பிங்கல நிகண்டை முதலாகக் கொண்டு நல்ல ஒரு உரிச்சொல்லின் பொருள் அறிந்து இன்புற்றனர் என்று கொள்கவே' என்று பவணந்தியார் நன்னூலில் குறிப்பிட்டுள்ளார்.மொழி வளர்ச்சிக்கு மிக முக்கியமான கருவிகள் நிகண்டுகள் மற்றும் அகராதிகள். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வெகு சிலரே மொழி ஆளுமை பெற்றுள்ளனர். அவர்களும் குறைந்தது அறுபது அகவைக்கு அருகில் இருப்பவர்கள் அல்லது அதற்கும் மேல் ஆனவர்கள். இலக்கணப் பிழையின்றி எழுதுவது அருகி வருகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'ஐயா வையாபுரியாரின்' தமிழ்ப் பேரகராதி
பல்கலைக்கழக வெளியீடாக வந்தது. அதன்பின்னர் ......
இருவருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். ஒருவர் முனைவர் திரு. குப்புசாமி கல்யாணசுந்தரம் அவர்கள். மற்றொருவர் திரு. க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள். இவ்விருவரும் ஆற்றிய , ஆற்றும் பணி ..... முனைவர்.குப்புசாமி கல்யாணசுந்தரம் தனது முயற்சியால் துவங்கி நடத்தி வரும் 'ப்ராஜெக்ட் மதுரை' மற்றும் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் வெளிவந்துகொண்டிருக்கும் 'தற்காலத் தமிழ் அகராதி' எளிதாகக் கடந்து விடக்கூடியது அல்ல. முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து மொழிக்காக உழைத்துள்ளனர். எண்ணிலடங்கா சங்க இலக்கிய இலக்கண நூல்கள் , சமய நூல்கள் , நிகண்டுகள் மற்றும் நெறி நூல்களைத் தட்டச்சு செய்து பதிவேற்றியுள்ளனர் முனைவர் குப்புசாமி கல்யாணசுந்தரம் மற்றும் அவரது அணியினர். சொல்வதற்கு எளிதாக இருக்கின்றது. இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு வியக்கத்தக்கது . சங்க இலக்கியத்தை இணையத்தில் வளர்க்கின்றது 'ப்ராஜெக்ட் மதுரை'. ' தற்காலத் தமிழ் அகராதி' என்பதொரு பெருங்கனவு. சொல்லிலடங்காக் கனவு. திரு. க்ரியா ராமகிருஷ்ணன் அதனை நனவாக்கியுள்ளார்.தொடர்ந்து அகராதியை ஒவ்வொரு பதிப்பிலும் மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர் க்ரியா அணியினர். நிகண்டுகளையும் அகராதிகளையும் பற்றிப் பேசும் பொழுது இவரைப் பற்றிப் பேசாதிருக்கலாகாது.
இவர்கள் மட்டுமல்லாது இவர்களோடு இணைந்து பணியாற்றும் இவர்களது அணியினர் ஒவ்வொருவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும். டாக்டர். கல்யாணசுந்தரம் வேதியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சுவிட்சர்லேண்ட் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் மூத்த விஞ்ஞானியாகவும் ஆராய்ச்சியாளராகவும் இருந்துகொண்டே மொழிக்காக இப்பணியினைச் செய்துள்ளார்.