Skip to main content

காகிதக் கப்பல்

1 இயற்சொல்  :
தமிழ் அறிந்த அனைவராலும் பொருள் மாறாமல் புரிந்து கொள்ளக் கூடிய தமிழ்ச்சொல்

2 திரிசொல்     :
இயல்பான உச்சரிப்பு (pronounciation) / பொருளில் (meaning) இருந்து  திரிந்து வரும் சொல்

3 திசைச்சொல் :
ஏதோவொரு ஊரிலும் பகுதியிலும் மட்டுமே பேசப்படும் சொல். வட்டாரச் சொல்.

4 வடசொல்    :
வேறு மொழியிலிருந்து வந்த சொற்கள்.

ஒரு வளர்ந்த மொழி, பிற மொழிகளுடன் 'கலந்தும்' 'கொடுத்தும்' 'பெற்றுமே' வளர்ந்திருக்கக் கூடும். 'காகிதம்' என்ற சொல் paper என்ற பொருளில் துருக்கியமொழியிலும் பயன்படுத்தப்படுகின்றது. நம்மிடம் இருந்து அங்கு சென்றதா ? அல்லது அங்கிருந்து வடக்கு வந்து , பின்னர் இங்கு சேர்ந்ததா ? மொழிவல்லுனர்கள் தெளிவுபடுத்தக் கூடும். 'தாள்' என்ற சொல்லும் paper/flat surface ஐக் குறிக்கின்றது. கொரிய மொழியில் உள்ள பல சொற்கள் தமிழை ஒத்திருப்பதாகச் செய்திகளைக் காண்கின்றோம். 'தெங்கு' என்ற மரம் 'தென்னை' ( coconut)என்று காலப்போக்கில் மருவி வந்துள்ளது. 'கொழூ' என்றால் 'செழுமை' என்று பொருள். உழவுக்குப் பயன்படுத்தும் 'கலப்பை'யின் (plough) மையப்பகுதி செழுமையாக இருக்கும். அதனால் தான் அதைக் கொழூவென்று சொல்வர். தற்காலத்தில் உழவர்களிடம் அச்சொல் பயன்பாட்டில் இல்லை. ஆனால் கொழுக்கட்டை,கொழுப்புச்சத்து என்ற சொற்கள் அதிலிருந்துதான் தோன்றியிருக்கின்றன . மண்டி (mandi) என்ற சொல் வடஇந்தியாவில் வழங்கப்படுகின்றது. வேறு நாடுகளில் இருந்து வடக்கே வந்து, பின்னர் அங்கிருந்து தென்னிந்தியா வந்திருக்கலாம் என்கின்றனர். பழமண்டி , தேங்காய் மண்டி என்றே பயன்படுத்துகின்றோம். இப்படிச் சொற்கள் மருவி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பயன்பாட்டில் இருக்கக்கூடும். மதுரைக்காரர்கள் 'பையத் தாங்க' என்றால் சென்னைக்காரர்களுக்குப் புரியாது. 'மெதுவாகத் தாருங்கள்' என்றால் தான் புரியும்.  சில சொற்களுக்கு 'முதல்' (origin) சொல்லவே முடியாது. இருப்பினும் மொழியில் கலந்து, காலத்தைக் கடந்து நிற்கும். அதைப்போலவே ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை - eight - acht - aat - ettu(எட்டு) என்று ஏன் ஒருபோல இசைக்கின்றன என்பதும் பெரும் வியப்பே.

நம்மிடமிருந்து பிற மொழிகள் பெற்றுக்கொண்டதைப் போல நாமும் பெற்றுக்கொண்டோம். நாம் வேறு மொழி பேசுவாரோடு தொழில், கலை, இலக்கியத் தொடர்புகொண்டு வளர்ந்து வந்ததை இது காட்டுகின்றது. வெளியுலகத் தொடர்பு இல்லாத ஒரே காரணத்தினால் குறுகிய நிலப்பரப்பில் பேசப்படும் மொழிகள் அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முடிந்தவரைத் தூய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவோம். வழக்கில் உள்ள வேற்று மொழிச்சொல்லைப் பயன்படுத்துதலும் தவறில்லை.  தேவைக்கேற்ப கலைச்சொற்களை இலக்கணம் அறிந்தோர் உருவாக்கலாம். தினந்தோறும் நாம் பயன்படுத்தும் சுத்தமான வடமொழிச்சொல் உதாரணங்கள்.

உதாரணம்   -    எடுத்துக்காட்டு
தினம்         -    நாள்
சுத்தம்        -    தூய்மை
சத்தம்         -    ஒலி
சுலபம்        -    எளிமை
வேகம்        -   விரைவு
தூரம்          -   தொலைவு
மனம்         -    உள்ளம்
அதிகம்       -   மிகுதி
மேகம்        -    முகில்

சரி கப்பல் வரவே இல்ல !
SUBSCRIBE here to nallatamil grammar